கேகாலை மாவட்டத்துக்கு இதுவரை பாரிய குறைபாடாக இருந்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் காரியாலயம் ஒன்றை பெற்றுத்தருமாறு முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கு மதிப்பளித்து விரைவாக மாவட்ட காரியாலயம் ஒன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று(23) உறுதியளித்தார்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் அமைச்சுடன் இணைந்த அனைத்து நிறுவனங்களின் சேவைகளையும் கிராமத்துக்கு எடுத்துச்செல்லும் நோக்கில் கேகாலை நிதகஸ் மாவத்தை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஜெயகமு ஸ்ரீலங்கா” மூன்றாம் கட்ட வேலைத்திட்டத்தின் முதலாவது நாள் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்த போது அமைச்சரிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
சம்பரகமுவ மாகாணத்தில் அதிகமான மக்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள மாவட்டமாக கேகாலை மாவட்டத்துக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் காரியாலயம் ஒன்று இல்லாமை பாரிய குறைபாடாகும் என தெரிவித்து, கேகாலை மாவட்ட வெளிநாட்டு தொழிலாளர்களின் இயக்கத்தினர் அமைச்சருக்கு தங்களது கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்று ஒப்படைத்தனர்.
அதன் பிரகாரம் உடனடியாக செயற்பட்ட அமைச்சர், காரியாலயம் ஒன்றை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.