நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் வகையில் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுமாயின் வடமாகாண பொலிஸாருக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் எதிர்காலத்தில் பிரிவினை யுத்தம் ஏற்படும் என பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அப்போது இலங்கைக்கு எதிரான பிரிவினைவாதிகளை ஆதரிக்கும் நாடுகள், பிரிவினைவாத அமைப்புக்கோ அல்லது வடக்கு பொலிசாருக்கோ எந்தவித தயக்கமும் இன்றி வெளிப்படையாக ஆதரவளிக்க முடியும் என ஹெல உறுமய தலைவர் எச்சரிக்கிறார்.
உதய கம்மன்பில தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய விசேட நிகழ்ச்சியில் இணைந்துகொண்ட போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
13வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு உள்ள மிகவும் ஆபத்தான அதிகாரங்களை நீக்குவதற்காகவே 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்ததாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுவது தொடர்பில் கருத்து தெரிவித்த உதய கம்மன்பில,
“.. பாட்டளி சம்பிக்க ரணவக்கவுடன் நான் நெருங்கியவனாக இருந்துள்ளேன் என்பதால் இவற்றை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். கல்லறைகள் ஊடாக செல்லும் போது சிலர் எந்த ஆவியாக இருந்தாலும் வாரும், நான் பயமில்லை என கூச்சலிடுபவர்களை தான் நினைவுக்கு வருகின்றது. அப்படி கூச்சலிடுபவர்கள் தான் பயந்தாங்கொள்ளிகள்.. அவ்வாறே பாட்டளியும் மூன்று முறை ஊடக சந்திப்புக்களை வைத்து ‘தான் ஜனாதிபதியாவதற்கு தன்னிடமுள்ள தகுதியற்ற ஆளுமைகளை’ கேட்டுக் கொண்டே வருகிறார்.. அவருக்கே தெரியும் இந்த வேலைக்கு அவர் சரிப்பட்டு வரமாட்டார் என.. நான் அதற்காக ஏழு காரணங்களை முன்வைக்கிறேன்.
ஜனாதிபதியாக பிரபல்யமடைந்திருக்க வேண்டும். இந்நாட்டில் ஜனாதிபதியான அனைவரும் தனது மாவட்டத்தில் முதலிடம் பெற்றவர். சந்திரிக்கா குமாரதுங்க போட்டியிட்ட எல்லா தேர்தலிலும் கம்பஹாவில் முதலிடம், மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட்ட எல்லா தேர்தலிலும் ஹம்பாந்தோட்டையில் முதலிடம், ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்ட எல்லா தேர்தலிலும் கொழும்பில் முதலிடம், மைத்திரிபால சிறிசேன போட்டியிட்ட எல்லா தேர்தலிலும் பொலன்னறுவையில் முதலிடம்.. மாவட்டத்தில் முதலிடம் பெற்றவரே நாட்டில் முதலிடம் பிடிக்கும். சம்பிக்க ரணவக்க, கடந்த தேர்தலிலும் ஐந்தாவது இடம், அதற்கு முன்னரும் ஐந்தாவது இடம், ஒருபோதும் மூன்றாவது இடத்திலிருந்து முன்னேறியதில்லை. கடந்த தேர்தலில் வாக்குகள் 5,000 குறைந்திருந்தால், ஜனாதிபதி என்ன எம்பி பதவி கூட கிடைத்திருக்காது. அப்படி நடந்திருந்தால் ஹிருணிகா தான் நாடாளுமன்றுக்கு வந்திருப்பார்.
அதிகார துஷ்பிரயோகம், இலங்கையில் ஜனாதிபதி பதவி என்பது அதிகாரமிக்கது. அமைச்சுப் பதவியில் இருந்த போதே அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் அவர் மீது உள்ளன. அது தொடர்பில் நீதிமன்ற வழக்கு கூட உள்ளது. அதாவது சந்தீப் குணவர்த்தன என்ற இளைஞனை விபத்துக்குள்ளாக்கியது மட்டுமின்றி பொலிஸ் அறிக்கையையும் மாற்றியமை. அது குறித்து வழக்கும் உண்டு.
அடுத்ததாக அவரது வீட்டில் இருந்த பணியாளர் ஒருவரின் காதலியை அமைச்சர் கோர அது தொடர்பிலான முரண்பாட்டில் பணியாளர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை மனநோய் வைத்தியசாலைக்கு பலவந்தமாக அழைத்துச்சென்று பலவந்தமாக மின்சாரப்பிடி வைக்கப்பட்ட சம்பவம். இது தொடர்பில் பணியாளர் பொலிஸ் மற்றும் வைத்திய சபைக்கு முறைப்பாடு அளித்தும் பலனில்லை.
போக்கிரி நடவடிக்கைகள், மவ்பிம பத்திரிகை அவரை அவமதிக்கும் வகையில் செய்தி வெளியிட்டதாக பத்திரிகைக்கு எதிராக 500 மில்லியன் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்தார். 2000ம் ஆண்டு மாதுலுவாவோ சோபித தேரரின் கூட்டத்திற்கு குண்டுவைத்த சம்பவத்தில் இருந்து போக்கிரி நடவடிக்கைகளை கூறிக் கொண்டே போகலாம்.
அடுத்ததாக நிலக்கரி மோசடி தொடர்பில் வாசுதேவ நாணயக்கார குற்றஞ்சாட்ட, அவருக்கு எதிராகவும் 500 மில்லியன் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்வதாக மிரட்டியமை..
தான் சுற்றாடல் அமைச்சராக இருந்தபோது இலாபம் ஈட்டியதாக அவர் தெரிவித்திருந்தார். சுற்றாடல் அமைச்சின் இலாபம் என்பது சுற்றாடல் சம்பந்தமாக இருக்க வேண்டும். பணமல்ல.. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையை மட்டுப்படுத்தினாரா? நச்சு வாயு வெளியேற்றம் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா? மரம் வெட்டுதல் நிறுத்தப்பட்டதா?
முறையான முகாமைத்துவமின்மை, அரசியல் தூரநோக்கு போன்ற பல காரணிகளினால் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர்..” என உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.