ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அவசர விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது இரண்டு நாள் பயணமாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இது தனிப்பட்ட பயணம் என்றும், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு செல்ல அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (09) பிற்பகல் ராமர் கோவிலில் இடம்பெறும் விசேட பூஜை நிகழ்வில் நாமல் ராஜபக்ஷவும் பங்கேற்கவுள்ளார்.
நாமல் ராஜபக்ச அயோத்தி மற்றும் டெல்லியில் தங்கியிருக்கும் போது இந்திய பிரமுகர்களையும் தனிப்பட்ட முறையில் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாசார மற்றும் மத உறவுகளை வலுப்படுத்துவதில் நாமல் ராஜபக்சவின் ஆர்வம் அவரது அயோத்தி ராமர் ஆலய விஜயத்தில் பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது.
அவர் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கவனம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினர் இந்திய பயணத்தை மேற்கொண்டுள்ளதன் பின்னணியில் நாமல் ராஜபக்சவும் இந்தியா செல்ல தீர்மானித்துள்ளார்.
இது ஐந்து நாள் பயணம் என்றும் அதன் கடைசி நாள் இன்று என்றும் கூறப்படுகிறது.
இந்தப் பின்னணியில்தான் நாமல் ராஜபக்ஷ இந்தியாவிற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் இந்திய விஜயத்தை நாமல் ராஜபக்ஷ அண்மையில் கடுமையாக விமர்சித்திருந்தார்.
அதில், தேசிய மக்கள சக்தியின் தலையீட்டால் இலங்கை பல இந்திய மற்றும் உலக முதலீட்டாளர்களை இழந்துள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்த ஜே.வி.பி பிறகு இந்தியாவுக்கு அடிக்கடி விஜயம் தருவது தன்னை ஆச்சரியப்படுத்துவதாக அவர் மேலும் கூறினார்.
இந்திய விஜயத்தின் பின்னர் இலங்கைக்கு வரும் முதலீட்டாளர்களுக்கு தேசிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும் என தாம் நம்புவதாக நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இந்தியாவிற்கு விஜயம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.