எதிர்வரும் தைப்பொங்கல் தினத்திலோ அல்லது அதற்கு முன்னரோ வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கான வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றினால் ஜனாதிபதிக்கும் இந்த அரசாங்கத்திற்கும் அனைத்து தமிழ் கட்சிகளும் எவ்வித சந்தேகமும் இன்றி முழுமையான ஆதரவை வழங்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர். சம்பந்தன் கடந்த 10ஆம் திகதி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் இருந்து இந்த நாட்டின் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்காக தைப்பொங்கலையும் சிங்கள இந்து புத்தாண்டையும் தெரிவு செய்த போதிலும் அந்த ஒரு வருடத்திலும் தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுக்கொடுக்கவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.
ஆனால் ஒவ்வொரு தைப் பொங்கல் தினமும் புத்தாண்டும் தமிழ் மக்களின் நம்பிக்கையை தூண்டி முன்னோக்கி நகர்த்துவதற்கு இவ்வாறான அறிக்கைகள் உதவுவதைக் காணும் போது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
இந்த தைப்பொங்கல் காலத்தில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறுவது போன்று வித்தியாசமான முறையில் செயற்படுபவர் தற்போதைய ஜனாதிபதி என நம்புவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்த நாட்டின் வடக்கு கிழக்குப் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்ற அதீத ஆசை அன்றிலிருந்து இருந்ததாகவும், அவரைச் சுற்றியிருந்த ஏனையவர்கள் அதற்கு இடம் கொடுக்காமல் இழுத்தடித்ததாகவும், ஆர்.சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.
தென்னிலங்கையின் இனவாத அரசியலில் தமிழ் மக்களுக்கு சற்று நிவாரணம் வழங்குவது மிகவும் கடினமான விடயம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் இந்நாட்டு தமிழ் மக்களும் எதையாவது பெற்றுக்கொள்ளும் உரிமையை இந்த தைப்பொங்கல் காலத்தில் அனைவரும் மிக வலுவாக சிந்திக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.