பம்பலப்பிட்டிய போரா முஸ்லிம் பள்ளிவாசல் மீது போரா முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே பெற்றோல் குண்டொன்றை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பம்பலப்பிட்டிய பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக செய்தியொன்று வெளியானதை அடுத்து இதுகுறித்து டெய்லி சிலோன் செய்திப் பிரிவு, பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் கேட்டது
இந்தச் சம்பவம் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தகவல் தருகையில்,
”போரா முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பொலிஸ் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. குறித்த நபரை கைதுசெய்ய பொலிசார் சென்றபோது, குறித்த நபர் பம்பலப்பிட்டி போரா முஸ்லிம் பள்ளிவாசலுக்கு ஒளிந்துள்ளார். இதன்போது பள்ளிவாசலை பொலிசார் சுற்றிவளைத்துள்ளனர். அங்கிருந்த பொலிசார் பள்ளிவாசல் மதில் ஏறி உள்ளே சென்றுள்ளனர். அருகில் இருந்தவர்கள் பொலிசாருக்கு மதிலில் ஏறிச் செல்ல ஏணியொன்றை வழங்கியுள்ளனர். இவ்வாறு உள்நுழைந்த பொலிசார் குறித்த நபரைக் கைதுசெய்துள்ளனர். நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் குறித்த நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தன்னைக் கைதுசெய்வதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் உதவியதாக நினைத்துள்ள குறித்த நபர், போத்தலில் பெற்றோலை நிரப்பி, பற்றவைத்து பள்ளிவாசல் வளாகத்திற்குள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதுகுறித்து பள்ளிவாசல் நிர்வாகம் முறையிட்டதை அடுத்து மீண்டும் அந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.” என்று பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ டெய்லி சிலோனுக்கு தகவல் தந்தார்.