உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பின்னடைவு குறித்து தொலைக்காட்சியில் அறிவுரை வழங்குவது மிகவும் எளிதானது என்றும், யாராவது ஆலோசனை கூற விரும்பினால், தன்னை நேரடியாக அழைக்கவும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
அப்படி நேரடியாக பேசாமல் தொலைகாட்சியில் விமர்சித்து நேரத்தை வீணடிப்பவர்களுக்கு தன்னுடைய தொலைபேசி இலக்கம் தெரியும் என்பதால் நேரடியாக அழைப்பு விடுத்தால் நன்றாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பாபர் அசாம், ‘தொலைக்காட்சி முன் அமர்ந்து அறிவுரை வழங்குவது அனைவருக்கும் எளிதானது’ என்று விமர்சகர்களை கடுமையாக சாடியுள்ளார்.
மொயீன் கான் மற்றும் சொயிப் மாலிக் உள்ளிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்கள் பாபர் ஆசாமின் தலைமையை வெளிப்படையாக விமர்சித்துள்ளனர், மேலும் தலைமை பதவியின் அழுத்தம் பாபர் அசாமின் துடுப்பாட்டத்தினை பாதித்ததாக அவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
சொயிப் மாலிக் கூறுகையில், பாபர் ஒரு துடுப்பாட்ட வீரராக சிறப்பாக இருந்தார் ஆனால் தலைவனாக தோல்வியடைந்தார்.
மேலும், இந்திய துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லியிடம் இருந்து பாபர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மொயீன் கான் தெரிவித்திருந்தார்.
“உலகக் கிண்ணத்தில் நான் சிறப்பாக செயல்படாததால், நான் அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. நான் எந்த அழுத்தத்திலும் இருக்கவில்லை. நான் எப்போதும் என் சார்பில் சிறந்ததைக் கொடுக்க முயற்சித்தேன். பந்தை அடிக்கும் போது எப்படி ரன் குவித்து அணியை வெல்வது என்று யோசிப்பேன். தலைமைத்துவம் பற்றி பாகிஸ்தானுக்குச் சென்ற பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்..” என்று பாபர் தெரிவித்துள்ளார்.