ரஃபா எல்லை திறக்கப்பட்ட போதிலும், காஸா பகுதியில் இன்னும் கடுமையான மோதல்கள் நிலவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று இரவு எங்கும் வெடிச் சத்தங்களும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கேட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், காசா பகுதியில் நேற்று இரவு தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவப் பிரிவுகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இதேவேளை, காஸா பகுதியில் உள்ள ரஃபா எல்லையை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக சுமார் 500 பேர் காஸா பகுதியிலிருந்து வெளியேறும் வாய்ப்பைப் பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், காஸாவிற்கு இப்போது மனிதாபிமான இடைநிறுத்தம் தேவை என்று கூறுகிறார். காஸா பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் இடைநிறுத்தம் வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.