ஏற்கனவே மிகவும் சிரமப்பட்டு வழங்கப்பட்டு வரும் அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு மேலதிக பணத்தை எவ்வாறு சேர்ப்பது என்பதை போராட்டங்களில் ஈடுபடுவோர் சுட்டிக்காட்ட வேண்டும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிடுகின்றார்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட பாரிய பொருளாதார வீழ்ச்சியினால் நாடு பல நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும், படிப்படியாக நல்லதொரு நிலை உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் கடன் மறுசீரமைப்பு முடியும் வரை நாடு மீண்டும் கடன் பெற முடியாது என்றும் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தப் பொருளாதாரப் பிரச்சினைக்கு சரியான தீர்வைக் காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மொத்த வரி வருமானத்தில் 72% அரச சேவைக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்காக செலவிடப்பட்டதாக தெரிவித்த அவர், சமுர்த்தி மற்றும் ஏனைய மானியங்களுக்கு ஐநூறு பில்லியன் செலவிடப்பட்ட போது திறைசேரிக்கு கிடைத்த வரி வருமானத்தில் ஒரு சதம் கூட மீதம் இருக்கவில்லை.
இவ்வாறான நிலையில் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பதை போராட்டக்காரர்கள் காட்ட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கெஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிலையில், அரச ஊழியர்களுக்கு முறையான சம்பள அதிகரிப்பு வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடப்பட்டுள்ளது.