உயிருடன் இருக்கும்போது வீதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் தனிப்பட்ட பெயர்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் காணி அமைச்சினால் புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இலங்கை நில அளவைத் திணைக்களம் தயாராகி வருகிறது.
பொதுச் சொத்துக்களில் உயிருடன் இருப்பவர்களின் பெயர்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் அதிகாரம் புதிய சட்டத்தின் மூலம் வழங்கப்படும் என திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி நில அளவையாளர் பற்கும் சாந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, வீதிகள், புதிய கட்டிடங்கள் மற்றும் பூங்காக்களுக்கு உயிருடன் இருப்பவர்களின் பெயர்களைப் பயன்படுத்துவது எதிர்காலத்தில் தடைசெய்யப்படும்.
அண்மைக்காலமாக இவ்வாறு வாழும் நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தி பல பொதுச் சொத்துக்கள் திறக்கப்பட்டுள்ளதாக நில அளவைத் திணைக்களம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாடுமுழுவதும் ஒரே பெயரில் பல வீதிகள் உள்ளதால் கூகுள் சேவையை புதுப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நில அளவை திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி நில அளவையாளர் பறகும் சாந்த மேலும் தெரிவித்துள்ளார்.