எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிம்மதியடையும் பிரதான தரப்பில் அரச ஊழியர்களும் உள்ளடங்குவதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரச மற்றும் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் சங்கம், அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை பதில் நிதியமைச்சரிடம் கையளிக்க நிதியமைச்சிற்கு வருகை தந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரச உத்தியோகத்தர்களின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதாகவும், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய தரப்பினர் மத்தியில் அரச உதவி கிடைக்க வேண்டியவர்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், அரச உத்தியோகத்தர்கள் ஆகியோர் முன்னிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அரச உத்தியோகத்தர்கள் உட்பட நிலையான மாதாந்த வருமானம் பெறும் குழுக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு குறுகிய கால தீர்வை விட நீண்ட கால தீர்விலேயே அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும், அடுத்த வரவு செலவுத் திட்டம் அதற்கான அடித்தளத்தை அமைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.