கடந்த 2017ஆம் ஆண்டு வத்திக்கானுக்கு விஜயம் செய்த போது, உலகெங்கிலும் உள்ள யுத்த சூழ்நிலைகளை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என பாப்பரசர் தன்னிடம் கேட்டதாக முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அந்தக் கேள்விக்கு நீண்ட பதிலைச் சொல்ல வேண்டியிருந்ததால், ஒன்றும் பேசாமல் பாப்பரசரைப் பார்த்து புன்னகைத்ததாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஆயுதங்களை உற்பத்தி செய்வதே யுத்தங்களுக்கு பிரதான காரணம் எனவும், ஆயுதங்களை உற்பத்தி செய்யாவிட்டால் உலகில் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான மோதல்கள் ஏற்படாது எனவும் பாப்பரசர் தெரிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.
இஸ்ரேல் – பலஸ்தீனப் பிரச்சினையில் போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்தக் கோரி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், இஸ்ரேல் – பலஸ்தீன போரில், இஸ்ரேல் பலஸ்தீன வைத்தியசாலைக்கு குண்டுத்தாக்குதல் நடத்தி அப்பாவி சிறுவர்கள் உள்ளிட்ட 500 பேரை பலி எடுத்ததை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு மிலேச்சத்தனமான தாக்குதல் என்றும், அதனை தாம் செய்யவில்லை என ஊடக அறிக்கை வெளியிட்டமை கேளிக்கையனது என்றும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறே உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் செய்யாத பலியை தான் ஏற்றதாகவும் தெரிவித்திருந்தார்.
இஸ்ரேல் இனது மிலேச்சத்தனமான தாக்குதலை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும் அவர் இதன்போது வலியுறுத்தி இருந்தார்.
- ஆர்.ரிஷ்மா