கடந்த அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான ஹமாஸ் போராளிகள், 1500க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
உலகையே அதிர வைத்த இந்த கொடூர சம்பவத்திற்கு பழி வாங்கும் விதமாக ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாக கூறி காஸா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது.
மிகவும் தீவிரமாக 13-வது நாளாக இப்போர் தொடர்ந்து நடந்து வரும் வேளையில், இப்போர் குறித்து இஸ்ரேல் பாராளுமன்ற உறுப்பினரான ஷாரன் ஹெஸ்கல் (Sharren Haskel) ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது;
“.. பல இஸ்ரேலியர்களை ஹமாஸ் மிருகத்தனமாக கொன்றுள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டிலிருந்து காஸா பகுதியை முற்றிலுமாக விடுவிக்க வேண்டும். நாம் நம்பும் மதிப்பு வாய்ந்த பண்புகளின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் இது. சுதந்திர உலகத்தின் ஜனநாயகத்திற்கும் பயங்கரவாத தீமைக்குக்கும் இடையே நடக்கும் போரை இஸ்ரேல் நடத்தி வருகிறது.
பயங்கரவாத எனும் பாம்பின் தலையாக ஈரான் செயல்படுகிறது. அந்த தலையான ஈரானை நாம் வெட்ட வேண்டும். ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் இரு அமைப்புகளுக்கும் ஈரான் நிதியுதவி செய்து வருகிறது. அனைத்து இஸ்ரேலியர்களும் ஒற்றுமையாக உள்ளனர்.
அனைத்து கட்சியினரும் அரசாங்கத்தின் பக்கம் நிற்கிறோம். பாலஸ்தீன பொதுமக்களும் ஹமாஸ் அமைப்பினரால் துன்பப்படுகின்றனர். அவர்கள் தங்கள் உயிரை காத்து கொள்ள மனித கேடயமாக பொதுமக்களை பயன்படுத்துகின்றனர்…”