பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் மன்னா ரமேஷை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் ஊடாக சிவப்பு பிடியாணை பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, அவரை கைது செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பொலிஸார் ஏற்கனவே செயல்படுத்தி உள்ளனர்.
மன்னா ரமேஷ் என்ற பாதாள உலக தலைவன் அவிசாவளை பிரதேசத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகளை அச்சுறுத்தி கொலை, கப்பம், போதைப்பொருள் கடத்தல் போன்ற பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றான்.
மன்னா ரமேஷ் தற்போது டுபாய் நாட்டில் தலைமறைவாகி இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னா ரமேஷின் கொலை, கப்பம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல குற்றச்செயல்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் ஆதாரங்களையும் பெற்று, குற்றப் புலனாய்வுத் துறை மூலம் சர்வதேச காவல்துறைக்கு அனுப்பும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
அவிசாவளை தல்துவ நகரில் முச்சக்கரவண்டியில் பயணித்த இரு இளைஞர்கள் மன்னா ரமேஷின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
இதேவேளை, அவிசாவளை, இரத்தினபுரி உள்ளிட்ட பல பிரதேசங்களில் பணக்கார மாணிக்கக்கல் வியாபாரிகளை அச்சுறுத்தி பல இலட்சம் ரூபா பணத்தை மன்னா ரமேஷ் வெற்றிகரமாக கப்பம் செய்து வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
மன்னா ரமேஷின் கும்பலின் பிரதான சீடரான தல்துவே மகேஷ், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதையடுத்து, நடவடிக்கையில் ஈடுபட்ட அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவிசாவளை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகரின் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவருக்கும் அவரது மகனுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.