சீனா மற்றும் ரஷ்யாவின் தலைவர்கள் காலநிலை மாநாட்டில் (COP26) கலந்து கொள்ளாததை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.
பருவநிலை மாற்றம் என்பது மிகப்பெரிய பிரச்சினை, சீனா மற்றும் ரஷ்யா பொறுப்பற்ற முறையில் காலநிலை மாநாட்டில் கலந்து கொள்ளாமல் பின்வாங்கிவிட்டன என்று ஜோ பைடன் தனது உரையில் குறிப்பிட்டார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் கிளாஸ்கோ காலநிலை மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும், நவம்பர் 14ம் திகதி வரை நடைபெற உள்ள இந்த மாநாட்டில், பேச்சுவார்த்தைகளில் பங்கெடுக்க இரு நாடுகளும் தங்கள் பிரதிநிதி குழுக்களை அனுப்பியுள்ளன.
உலக அளவில் அதிகம் கார்பனை உமிழும் நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியாவைத் தொடர்ந்து ரஷ்யா ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் COP26 மாநாட்டில் 120 உலக நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கெடுத்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தைத் தவிர்ப்பது, கார்பன் உமிழ்வைக் குறைப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஏற்கனவே உலக நாடுகள் பல முக்கிய வாக்குறுதிகளை அறிவித்துள்ளன.
“சீனா உலக அரங்கில் ஒரு உலகத் தலைவராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயலும் உண்மையை புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் காலநிலை மாநாட்டில் கலந்து கொள்ளாமலா” என கூறினார் பைடன். மேலும் சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகை தராதது மிகப்பெரிய தவறு என்றும் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் காடுகள் தீபற்றி எரிந்து வருகின்றன, அந்நாட்டின் அதிபர் அப்பிரச்னை குறித்து வாய்திறக்காமல் அமைதியாக இருக்கிறார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.