உலகக் கிண்ணத்திற்கு முந்தைய நாளான இன்று (04) இரவு 7:00 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த தொடக்க விழாவை இரத்து செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
நேற்று அறிவிக்கப்பட்ட இந்த முடிவிற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை, மேலும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிகாரபூர்வ தொடக்க விழா நடைபெறாதது இதுவே முதல் முறை என்றும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. .
ஆஷா போஸ்லே, ரன்வீர் சிங், அர்ஜித் சிங், ஷெர்யஸ் கோஷல் உள்ளிட்ட பாலிவுட்டின் பிரபல கதாப்பாத்திரங்கள் இந்த திறப்பு விழாவில் பங்கேற்க இருப்பதால் ஏராளமானோர் தொடக்க விழாவை காண எதிர்பார்த்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
எனினும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் கிரிக்கெட் அணித்தலைவர்கள் நரேந்திர மோடி மைதானத்தில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கருத்து தெரிவிக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்றைய விழாவானது ‘லீடர்ஸ் டே’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி ‘லீடர்ஸ் டே’ செயல்பாடுகள் நடந்து வரும் நிலையில், தொடக்க விழா இரத்து செய்வது குறித்து முறையான அறிவிப்பு வெளியாகாதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் அனைத்து 10 அணி கேப்டன்களும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று ‘லீடர்ஸ் டே’ நிகழவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த மிகப்பெரிய கிரிக்கெட் போட்டியின் பாரம்பரிய தொடக்க விழாவிற்கு பதிலாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வரும் 14-ம் திகதி நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கு முன்னதாக சிறப்பு விழாவை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் தயாராக இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் இடம்பெறவுள்ள பல செயற்பாடுகள் தொடர்பில் எவ்வித முன் விளம்பரங்களும் இடம்பெறாதிருக்க ஏற்பாட்டாளர்கள் கவனமாக செயற்பட்டுள்ளனர்.