எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச VIP வரப்பிரசாதங்களைப் பயன்படுத்தி விமான நிலையத்தில் இருந்து தங்கம் கொண்டு வந்த எம்பிக்கு எதிராக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக தீர்மானம் கொண்டு வந்ததைப் போல மது, புகையிலை, சிகரெட் மற்றும் போதைப்பொருள் பாவனையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்மதித்தால், நாடு என்ற வகையில் முன்ணுதாரனமாக செயற்பட முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
புகையிலை, சிகரெட், மதுபானம் தொடர்பான வரி வருமானம் நாட்டுக்கு சரியாக கிடைக்காமல் போவது சில அரச அதிகாரிகள் நிறுவனங்களின் கைப்பாவையாக மாறியுள்ள பின்னணியில் என்றும், 225 பேரும் இணைந்து சட்டங்களை இயற்றினால் இதனையும் இல்லாதொழிக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறைச்சாலைகளில் இருந்த போதும் கடத்தல்களை மேற்கொள்வதால் இவர்களுக்கு எதிராக சிங்கப்பூரில் உள்ளதைப் போன்று கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இதன் மூலம் தற்போதைய பாடசாலை கட்டமைப்பை ஆட்கொண்டுள்ள போதைப்பொருள் கடத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை பெறுவதற்கான விசேட நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்ற போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.