நாட்டின் 70% மின்சாரத் தேவையை புதுப்பிக்கத்தக்க ஆற்றலைக் கொண்டு பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தி, மின்சாரக் கட்டணத்தை குறைந்தபட்ச நிலைக்குக் கொண்டு வருவதற்கான திட்டங்களை வகுத்து வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டு இலக்காகக் கொண்ட 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டத்தை மேலும் நடைமுறைப்படுத்தி அந்த இலக்கை அடைய தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் நேற்று (20) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் திரு.இந்திக்க அனுருத்த இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த இந்திக்க அனுருத்த;
“புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இந்த நாட்டின் மிகப்பெரிய ஆற்றல் மூலமாகும். அதனை அபிவிருத்தி செய்வதன் மூலம் எரிபொருளுக்காக செலவிடப்படும் பணத்தை நாட்டில் வைத்துக்கொள்ள முடியும். எரிபொருளுக்காக செலவிடப்படும் தொகையை குறைப்பதன் மூலம் மின் கட்டணத்தை குறைந்தபட்ச நிலைக்கு கொண்டு வரவும் முடியும். மேலும், அந்த பணத்தை மற்ற வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த முடியும்” என்றார்.