சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான நந்துன் சிந்தக என்ற ஹரக் கட்டா, தான் தப்பிச் செல்ல உதவிய குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸ் கான்ஸ்டபிள் இற்கு ஒரு கோடி ரூபாவை வழங்கியுள்ளதாக உண்மைகள் வெளியாகியுள்ளன.
காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிளும் அவரது மைத்துனரும் இணைந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் உள்ள நந்துன் சிந்தக அல்லது ஹரக் கட்டாவை சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிளின் மைத்துனரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இவ்விடயங்கள் தெரியவந்துள்ளன.
திருகோணமலை, சேருநுவர பிரதேசத்தைச் சேர்ந்த அமில சஞ்சீவ என்ற சந்தேக நபரை பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் மற்றும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்ல, காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிளும் இந்த சந்தேக நபரும் திட்டமிட்டுள்ளதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
மேலும், ஹரக் கட்டா கான்ஸ்டபிளின் மைத்துனரான சந்தேக நபருக்கு 20 இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றவாளி தப்பிச் செல்ல உதவிய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் கான்ஸ்டபிளைக் காணவில்லை எனவும் அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய இந்த சம்பவம் தொடர்பான விசாரணை பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவன் என்று கூறப்படும் கஞ்சிபானி இம்ரான் அல்லது முகமது நஜீம் இம்ரான், தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகவும், அவருக்கு இந்திய உளவுத் துறையினர் உதவியதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.