பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் சாரதிகளை உடனடியாக பணிக்கு சமூகமளிக்குமாறு இன்று (13) அறிவித்தல் விடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்ட போதிலும் பணிக்கு சமூகமளிக்காத சாரதிகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதவி உயர்வு தொடர்பான பிரச்சினையின் அடிப்படையில் புகையிரத சாரதிகள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு காரணமாக புகையிரத சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று (12) மாத்திரம் 119 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டன.
புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று இரவு வெளியிட்டார்.
எவ்வாறாயினும், புகையிரத சாரதிகள் சங்கம் இதுவரையில் பணிப்பகிஷ்கரிப்பை கைவிடவில்லை எனவும், இந்த நிலையில் இன்று சுமார் 150 புகையிரத பயணங்கள் இரத்துச் செய்யப்படும் அபாயம் காணப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை மாத்திரம் 37 குறுகிய ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே இணை முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்.
பணிபுரியும் ரயில்வே ஊழியர்கள் மற்றும் உடமைகளின் பாதுகாப்பிற்காக ரயில்வே பொது மேலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க 32 ரயில் நிலையங்களுக்கு பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே துணை பொது மேலாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்.
இதற்கிடையில் வேலை நிறுத்தம் தொடருமா? இல்லை? இன்று பிற்பகல் செயற்குழு கூடி முடிவெடுக்கும் என பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள இன்ஜின் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட சேவையை அத்தியவசிய சேவையாக்கிய பின்னர், பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்களின் வேலை மாத்திரமன்றி அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என ஜனாதிபதியின் சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.