ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை அடிப்படையாக கொண்டு சேனல் 4 வெளியிட்ட காணொளி குறித்து அரசியல் மேடையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றமையினை காணக்கூடியதாக உள்ளது.
இதேவேளை, சேனல் 4 தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பிய சர்ச்சைக்குரிய அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமிப்பார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் உண்மையைக் கண்டறியவும் நீதியை நிலைநாட்டவும் சாதகமான நடவடிக்கையாக ஜனாதிபதி இந்தக் குழுவை நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட ஒருவர் இருந்ததாக முன்னாள் சட்டமா அதிபர் ஒருவர் தெரிவித்திருந்த கருத்தானது, எரியும் நெருப்பில் வைக்கோல் சேர்ப்பது போன்ற நிலை உருவாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சினைகளை பரந்த கவனத்திற்குக் கொண்டு வந்து விரைவாகத் தீர்க்கும் வகையில் இந்த குழப்பமான அறிக்கைகள் தொடர்பில் ஆராய பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்கவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.