சமரி அத்தபத்துவின் சகலதுறை ஆட்டத்தின் உதவியுடன் இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவதும், கடைசியுமான T20i போட்டியில் 7 விக்கெட்டுகளால் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அபார வெற்றியீட்டியது.
இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருதரப்பு T20i தொடரொன்றை வென்ற முதல் ஆசிய நாடாக இலங்கை மகளிர் அணி புதிய வரலாறு படைத்தது.
இதற்கு முன் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுடனான T20i தொடர்களில் இங்கிலாந்து மகளிர் அணி தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட T20i தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் ஆடி வருகின்றது.
இரு அணிகளுக்கும் இடையில் ஹோவ் விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 31ஆம் திகதி நடைபெற்ற முதலாவது T20I போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 12 ஓட்டங்களால் இலங்கை தோல்வி அடைந்தது.
எனினும் செல்ஸ்ஃபோர்ட் விளையாட்டரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற 2ஆவது T20I போட்டியில் இங்கிலாந்தை 8 விக்கெட்டுகளால் வெற்றிகொன்டு இலங்கை வரலாறு படைத்தது.
இந்த நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான தீர்மானமிக்க 3ஆவதும், கடைசியுமான T20I போட்டி நேற்று (07) டெர்பையில் உள்ள கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றது.
மையா பூஷியர் 18 பந்துகளில் 23 ஓட்டங்களையும், டெனில்லே கிப்சன் 15 பந்துகளில் 21 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் சமரி அத்தபத்து 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், உதேஷிகா ப்ரபோதனி மற்றும் கவிஷா டில்ஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 116 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவி சமரி அத்தபத்து 28 பந்துகளை எதிர்கொண்டு 5 பௌண்டறிகள், 2 சிக்ஸர்கள் உட்பட 44 ஓட்டங்களையும், ஹர்ஷிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களையும், அனுஷ்கா சன்ஜீவனி 20 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
இதன்படி, 3 போட்டிகள் கொண்ட T20I தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றிய இலங்கை மகளிர் அணி முதல் தடவையாக இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாறு படைத்தது.
3ஆவது T20I போட்டியின் ஆட்டநாயகி விருதையும், தொடர் நாயகி விருதையும் இலங்கை அணித்தலைவி சமரி தட்டிச் சென்றார்.
முன்னதாக கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை 2க்கு 1 எனவும், அந்த அணியுடனான 3ஆவதும், கடைசியுமான T20I போட்டியையும் வென்று இலங்கை மகளிர் அணி புதிய வரலாறு படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நாளை மறுதினம் (09) செஸ்டர்–லி–ஸ்ட்ரீட்டில் நடைபெறவுள்ளது.