நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் காண்டாக்ட் லென்ஸ்கள் பற்றாக்குறை காரணமாக அனைத்து வைத்தியசாலைகளிலும் கண் அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படும் அபாயம் இருப்பதாக சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக கண் அறுவை சிகிச்சை காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய ‘ஸ்வஸ்த’ கணினி அமைப்பு, எந்த வைத்தியசாலையிலும் கான்டாக்ட் லென்ஸ்கள் இல்லை என நேற்று (3) பிற்பகல் தெரிவித்துள்ளது.
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் மாத்திரம் சுமார் 5,000 காண்டாக்ட் லென்ஸ்கள் பிரித்தானியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மாதாந்த கண் சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதற்கு 15,000 காண்டாக்ட் லென்ஸ்கள் தேவைப்படுகின்றன. இந்த ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதி ஏழு வகையான காண்டாக்ட் லென்ஸ்களை வழங்குவதற்கு, அரச மருந்து ஒழுங்குமுறைக் கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒப்புதலின்படி, இரண்டு டெண்டர்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும், இரண்டு சப்ளையர்களுக்கிடையிலான சர்ச்சைக்குரிய சூழ்நிலை காரணமாக, காண்டாக்ட் லென்ஸ்கள் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தவிடம் கேட்டபோது, காண்டாக்ட் லென்ஸ்கள் தட்டுப்பாடு மற்றும் டெண்டர் கோருவது குறித்து இந்த வாரம் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.