சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் கவனம் செலுத்தியுள்ளனர்.
எதிர்கட்சி எம்.பி.க்கள் இந்த பிரேரணையை வெற்றிகொள்ள ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளில் விவாதிப்பது என அண்மையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 8ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
எவ்வாறாயினும், இந்த பிரேரணையை வெற்றிகொள்வதற்கு பாராளுமன்றத்தில் உள்ள ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்றையும் அரசாங்கம் நியமித்துள்ளது.
மேலும் இந்த வாரம் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, நாட்டில் நிலவும் சுகாதார சீர்கேடு தொடர்பில் அரசியல் கட்சிகள், மதத் தலைவர்கள், சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவிக்கும் விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
தற்போது நிலவும் சுகாதார சீர்கேடு தொடர்பில் சமூகத்தில் சரியான புரிதலை ஏற்படுத்தும் வகையில் இந்த வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படுவதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சம்மில் விஜேசிங்க தெரிவித்தார்.