ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான போட்டியில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினை இலங்கை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.
மேலும் இந்த வெற்றியுடன் ஆசியக் கிண்ணத் தொடரினையும் இலங்கை வெற்றியுடன் ஆரம்பம் செய்திருக்கின்றது.
முன்னதாக கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகிய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் கிரிக்கெட் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தது. அதேவேளை இப்போட்டிக்கான இலங்கை அணி மதீஷ பத்திரன மற்றும் துனித் வெல்லாகே ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியிருந்தது.
இலங்கை XI
பெதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தனன்ஞய டி சில்வா, தசுன் ஷானக்க (தலைவர்), துனித் வெல்லாலகே, மகீஷ் தீக்ஷன, மதீஷ பதிரன, கசுன் ராஜித
பங்களாதேஷ்
தன்ஷிட் தமிம், நயீம் ஷேக், நஷ்முல் ஹொசைன், தௌகீத் ரிதோய், சகீப் அல் ஹசன் (தலைவர்), முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹஸன், மஹேதி ஹஸன், தஸ்கின் அஹ்மட், ஹசன் மஹ்மூட், முஸ்தபிசுர் ரஹ்மான்
பின்னர் போட்டியின் நாணய சுழற்சிக்கு அமைய துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி ஆரம்பம் முதல் இலங்கையின் சுழல் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் மூலம் தடுமாற்றத்தினை காட்டியதோடு 42.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 164 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் நஜ்முல் ஷன்டோ அதிகபட்சமாக 7 பௌண்டரிகள் அடங்கலாக 89 ஓட்டங்களைப் பெற்றார். இதேவேளை இலங்கை பந்துவீச்சில் மதீஷ பத்திரன 32 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய சிறந்த பந்துவீச்சுப் பிரதியினை பதிவு செய்ததோடு, ஒருநாள் போட்டிகளில் குறைவான வயதில் 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய இலங்கை வேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாஸின் சாதனையும் முறியடித்திருந்தார். அதேநேரம் மகீஷ் தீக்ஸன 19 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 165 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி தமது ஆரம்ப வீரர்களை இழந்து தடுமாறிய போதிலும் சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க ஜோடியின் நான்காம் விக்கெட் இணைப்பாட்டத்தோடு (78) போட்டியின் வெற்றி இலக்கை 39 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களோடு அடைந்தது.
இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் இறுதிவரை களத்தில் இருந்த சரித் அசலன்க தன்னுடைய 9ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்கள் பெற்றிருந்தார். அதேநேரம் சதீர சமரவிக்ரம தன்னுடைய நான்காவது ஒருநாள் அரைச்சதத்தோடு 77 பந்துகளில் 6 பௌண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்கள் பெற்றார்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் அதன் தலைவர் சகீப் அல் ஹசன் 02 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். இப்போட்டியின் வெற்றியோடு இலங்கை கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 11 வெற்றிகளைப் பதிவு செய்ய, ஒருநாள் போட்டிகளில் எதிரணிகளை அதிக தடவைகள் அனைத்து விக்கெட்டுக்களை கைப்பற்றிய அணியாகவும் புதிய உலக சாதனை படைத்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் இலங்கை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான மதீஷ பத்திரன தெரிவாகியிருந்தார். இலங்கை அணி ஆசியக் கிண்ணத் தொடரில் அடுத்ததாக ஆப்கானை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (05) எதிர்கொள்கின்றது.