சீனப் பிரஜைகள் இலங்கைக்கு வரும்போது அவர்களுக்கு வருகை தரும் விசா வசதியை (on arrival) வழங்குவதற்கான சாத்தியம் மற்றும் மெண்டரின் மொழியில் ஆன்லைன் முறைகள் மூலம் விசா விண்ணப்பங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு கடந்த 22ஆம் திகதி கூடியபோதே அது இடம்பெற்றுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகளுக்கு இது தொடர்பான அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு குழுவின் உப தலைவர் பணிப்புரை விடுத்தார்.
மேலும், கடந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், வெளிவிவகார அமைச்சில் செயற்படும் ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியங்களின் பங்கு மற்றும் அந்த பிராந்தியங்கள் தொடர்பான நாட்டின் இராஜதந்திர கொள்கைகள் குறித்தும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், கௌரவ நிரோஷன் பெரேரா, சட்டத்தரணி எஸ். எம். எம். முஷாரப், கலாநிதி காவிந்த ஹேஷான் ஜயவர்தன, அகில எல்லாவல, ஷனக்கியன் ராஜபுத்திரன் ராசமாணிக்கம், யதாமினி குணவர்தன, சட்டத்தரணி மதுர விதானகே ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
வெளிவிவகார அமைச்சு மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த சந்திப்பில் கலந்துகொண்டது.