காலி சிறைச்சாலையில் மெனிங்கோகோகல் பாக்டீரியா (MENINGOCOCCAL BACTERIA) தொற்று பரவும் அபாயம் இதுவரை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காலி மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சோமரத்ன கோனார தெரிவித்துள்ளார்.
மெனிங்கோகோகல் பாக்டீரியாக்கள் மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறைகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலி, உனவடுனவில் உள்ள மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காலி சிறைச்சாலையில் 13 நோயாளிகள் பாக்டீரியா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்துள்ளதாகவும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறைக்கு வெளியே இந்த பாக்டீரியா பரவவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், சொறியுடன் ஏற்படுவதாகக் கூறப்படும் இந்த மெனிங்கோகோகல் பாக்டீரியம், குழந்தைகளுக்கு அதிக தீங்கு விளைவிப்பதாகவும், போதைப்பொருள் பாவனையால் உடல்நிலை பலவீனமடைந்தவர்களும் உயிரிழப்பதாகவும் வைத்தியர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், Meningococcal – Meningitis குறித்து மக்கள் தேவையில்லாத அச்சம் கொள்ள வேண்டாம் என தொற்றுநோயியல் துறை தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் இவ்வாறான பல நோயாளிகள் பதிவாகுவதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்தார்.
காலி சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்று திடீரென சுகவீனமடைந்த நிலையில் அவர்கள் மூளைக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி, இந்நோய் பரவுவது தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்தார்.