காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு இலங்கை எடுத்து வரும் மூலோபாய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை உள்ளடக்கிய தேசிய ஆலோசனைக் குழுவொன்றை ஸ்தாபிப்பது முக்கியம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
இந்தக் குழு ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது கூடி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி பரிந்துரைத்தார்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான இலங்கையின் முன்னெடுப்புகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் வகையில் நேற்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பல நிபுணர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் கலந்துகொண்ட இந்த கலந்துரையாடலில், வரவிருக்கும் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் ஒரு நாடாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய மூலோபாய திட்டம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் உள்ளுர் மற்றும் பூகோள சவால்களுக்கு முகங்கொடுக்க வலுவான வேலைத்திட்டம் தேவை என தெரிவித்த ஜனாதிபதி, உலகளாவிய ரீதியில் சவாலை வெற்றிகொள்வதற்கு வலுவான சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.