ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ILT20 தொடருக்காக புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட இலங்கை வீரர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கை அணியைச் சேர்ந்த 8 வீரர்கள் மூன்று வெவ்வேறு அணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதுடன், தமிழ்பேசும் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்தும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
புதிதாக இணைக்கப்பட்டுள்ள பட்டியலின் அடிப்படையில் டுபாய் கெபிட்டல்ஸ் அணிக்காக இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானகவுடன், சதீர சமரவிக்ரம மற்றும் நுவான் துஷார ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் இளம் சுழல் பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் அனுபவ துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா ஆகியோர் மும்பை எமிரேட்ஸ் அணிக்காக இணைக்கப்பட்டுள்ளதுடன், சார்ஜா வொரியர்ஸ் அணிக்காக மேலும் மூன்று இலங்கை வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
அதன்படி இளம் வேகப் பந்துவீச்சாளர் டில்ஷான் மதுசங்க, குசல் மெண்டிஸ் மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் சார்ஜா வொரியர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளனர்.
இதேவேளை மேற்குறிப்பிட்ட வீரர்களுக்கு முன்னர் இலங்கை அணியின் மேலும் 5 வீரர்கள் அணிகளால் தக்கவைக்கப்பட்டிருந்தனர்.
இதில் டுபாய் கெபிட்டல்ஸ் அணிக்காக துஷ்மந்த சமீர, அபு தாபி நைட் ரைடர்ஸ் அணியில் சரித் அசலங்க மற்றும் டெசர்ட் வைப்பர்ஸ் அணிக்காக மதீஷ பதிரண, தினேஷ் சந்திமால் மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களின் விபரம்
டுபாய் கெபிட்டல்ஸ் – தசுன் ஷானக, நுவான் துஷார, சதீர சமரவிக்ரம
மும்பை எமிரேட்ஸ் – விஜயகாந்த் வியாஸ்காந்த், குசல் பெரேரா
சார்ஜா வொரியர்ஸ் – டில்ஷான் மதுசங்க, குசல் மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷன