ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் குழுவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.
இந்த கலந்துரையாடல் இன்று (18) முற்பகல் 11.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன, பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தாமதமானதால் வேட்புமனுவைச் சமர்ப்பித்த தமது உறுப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவருவதே இந்த கலந்துரையாடலின் நோக்கம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்தார்.
தேர்தல் நீடிப்பதால், நியமனம் செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் பிரதிநிதிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும், அரச உத்தியோகத்தர்கள் சிலர் தமது பணிகளில் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டுள்ளதாகவும் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.