ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணிக்கு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைவராக நியமிக்கப்பட்டதால் நீதியமைச்சர், ஜனாதிபதி சிரேஷ்ட சட்டத்தரணி அலி சப்ரி விக்ரதியடைந்துள்ளதாக நீதியமைச்சின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாடு சட்டத்துறை சார்ந்திருந்த போதிலும், கடும்போக்கு வாதியாக செயற்பட்ட ஞானசார தேரர் இதன் தலைமைத்துவத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதால் நீதியமைச்சர் விரக்தியடைந்துள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன், சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீது இனவெறிப் பேச்சுக்களை கட்டவிழ்த்துவிடுவதில் ஞானசார தேரர் முன்நின்று செயற்பட்ட நிலையில், அவர் போன்ற ஒருவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளமையும் பெரும் அதிருப்தியை ஏற்பட்டுள்ளது.
இந்த செயலணியில் ஞானசார தேரர் நியமிக்கப்படுவது குறித்து நீதியமைச்சராக தன்னிடம் எவ்வித ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்ற மனக்குறையுடனும் நீதியமைச்சர் இருப்பதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், நீதித்துறையை மறுசீரமைத்து நீதிமன்றக் கட்டமைப்பை வலுப்படுத்தவதற்கு நீதியமைச்சர் அலி சப்ரி கடுமையாக உழைத்துவரும் நிலையில், இந்த புதிய செயலணி அவரது முயற்சிகளை விரக்தியடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற ஒருவரை ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செலயணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை சமூகத்தின் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.