சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர் சம்மேளனம் வெளியிட்டுள்ள பண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சுமார் இரண்டு வருடங்களாக இறுதி அறிக்கை எதனையும் தயாரிக்கவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.
பண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் உள்நாட்டு வருமான வரித் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித் திணைக்களம் 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் 13ஆம் திகதி ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வழங்கியிருந்தது.
இதன்படி, பண்டோரா ஆவணங்களில் உள்ள இலங்கையர்களின் வரிப்பணம் செலுத்தியமை தொடர்பான கோப்புகள் மற்றும் வரி ஏய்ப்பு இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து ஆராயப்படும் என உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்திருந்தது.
நீதிமன்றத்தால் அது தொடர்பான அறிக்கைகளை வழங்குவதற்கு உள்நாட்டு வருமான வரித் திணைக்களம் கடமைப்பட்டிருப்பதாக திணைக்கள வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
பண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் உலக வல்லரசுகள், பணக்காரர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்களின் வரி ஏய்ப்பு, சட்டவிரோதமாக சொத்து குவிப்பு மற்றும் பணமோசடி நடவடிக்கைகள், அரசியல் தொடர்புள்ள இலங்கையர் திருகுமார் நடேசன் மற்றும் அவரது மனைவி நிருபமா ராஜபக்ஷ ஆகியோரின் தகவல்களும் அம்பலமானமையும் குறிப்பிடத்தக்கது.