இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மொத்த சம்பளம் 416,852/= ஆகும். சகல கழிவுகளும் சென்ற பின்னர் அவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் 322,658/= ரூபா ஆகும்.
ஆனால் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டு இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் வழங்கப்பட்டுள்ள வீடொன்றுக்கு மாதம் 1000/= ரூபா கூலியே செலுத்துகின்றனர்.
அத்தோடு இந்த வீடுகளுக்கு தேவையான மின்சாரம் மற்றும் தண்ணீர் என்பன கூட இலவசமாகவே வழங்கப்படுகின்றது. மின்சார துண்டிப்பு நேரங்களில் கூட இங்கு எந்த தடையும் இன்றி மின்சாரம் வழங்கப்படும். இது தவிர பாதுகாப்பு சேவை மற்றும் சுத்தம் தொடர்பான சேவைகளும் இலவசமாக மக்கள் வரிப்பணத்திலையே வழங்கப்படுகின்றன.
அப்படியான ஒரு வீட்டை கொழும்பின் ரம்யமான ஒரு பகுதியில் கூலிக்கு எடுப்பது என்றால் 75000/= முதல் 100000/= ரூபா வரை செலவாகும்.
இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ள மாதிவெல வீட்டுத்திட்டத்தில் 120 வீடுகள் உள்ளன. 111 வீடுகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏனைய வீடுகள் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
அரச அதிகாரி ஒருவர் அரசாங்க வீடு ஒன்றை தன் பாவனைக்கு எடுப்பதாக இருந்தால் தன்னுடைய அடிப்படை சம்பளத்தில் 10% வீதத்தை செலுத்த வேண்டும்.
அப்படி என்றால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அடிப்படை சம்பளமான 54285/= ரூபாயில் இருந்து 10% வீதமாக 5428/= செலுத்த வேண்டும். ஆனால் அவர்கள் வெறும் 1000/= மட்டுமே சகல வசதிகளுடன் கூடிய இந்த வீட்டுக்கு கூலியாக வழங்குகின்றனர்.
இது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதமா அல்லது சட்டம் சகலருக்கும் சமம் இல்லையா என்ற கேள்விக்குள் ஒவ்வொரு தனி நபரையும் கொண்டு செல்கின்றது.