செயற்பாட்டாளரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளருமான வசந்த முதலிகே, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) தேசபந்து தென்னகோன் தொலைபேசி அழைப்பின் மூலம் தன்னை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். வசந்த முதலிகே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (25) வெளியிடப்பட்ட கடிதத்தில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டார்
‘நான் கைது செய்யப்பட்ட ஒகஸ்ட் 6, 2021 அன்று தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். நான் வாக்குமூலத்தை அளிக்கும் போது, (SDIG) தென்னகோன் தலங்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை (OIC) அழைத்தார். அவர் எனக்கு தொலைபேசியைக் கொடுத்தார். அவர் என்னிடம் சொன்னார்:
‘இந்த முறை நான் உங்களில் யாரையும் போக விடமாட்டேன். உங்கள் அனைவரையும் அழிப்பேன். கவனமாக இருங்கள்.’ இதை நான் மிகுந்த பொறுப்புடன் சொல்கிறேன். தேசபந்து தென்னகோன் என்னை தொலைபேசியில் இவ்வாறு அச்சுறுத்தினார்.
எவ்வாறாயினும் (SDIG) தென்னகோன் இந்தக் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்தார்.
‘நான் அவரிடம் வேறொருவரின் தொலைபேசி மூலம் பேசினேன் என்று எப்படிச் சொல்ல முடியும்? அது எப்படி நடக்கும்?’
கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக (KNDU) சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களில் கொழும்பு முழுவதும் மற்றும் நாடு முழுவதும் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டங்களில் கலந்து கொண்ட கல்வித்துறை தொழிற்சங்கங்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அதே வாரத்தில் பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ஒகஸ்ட் முதல் வாரத்தில் கைது செய்யப்பட்டனர்.
முன்னிலை சோசலிஸ்ட் கட்சியின் (FSP) செயற்பாட்டாளர்களான கோஷிலா ஹன்சமலி பெரேரா மற்றும் சமீர கொஸ்வத்த ஆகியோர் ஒகஸ்ட் 3 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பொது மாணவர் சங்கத்தின் தலைவர் அமில சந்தீப ஆகஸ்ட் 5 ஆம் திகதி கைது செய்யப்பட்டார், முதலிகே ஒகஸ்ட் 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.