நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் பொம்மிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு (07) கைது செய்யப்பட்டதுடன், ஏனைய 07 சந்தேகநபர்கள் இன்று (08) காலை நவகமுவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
தேரர் ஒருவரையும் இரண்டு பெண்களையும் தாக்கி பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ மேலும் தெரிவிக்கையில்;
“..குறித்த பெண்கள் இருவரும் இரவு நேரத்தில் விகாரைக்கு சென்றுள்ள நிலையில், அங்கிருந்து திரும்பாததால் அங்குள்ள விகாரைக்கு சென்ற பிரதேசவாசிகள் அங்கு பதற்றமான சூழ்நிலையினை உருவாக்கியுள்ளனர். பின்னர் தேரர் இருந்த அறையினை சோதிக்கையில் அங்குள்ள அறையில் பெண்கள் இருவரும் இருந்த நிலையில் சில பிரதேசவாசிகள் தேரரையும் பெண்கள் இருவரையும் தாக்கியுள்ளனர். பெண்களது உடைகளை கழற்றி வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.இது கடந்த 6 ம் திகதி இடம்பெற்றுள்ளது.. நேற்றைய தினம் சமூக வலைதளங்களில் வீடியோ பகிரப்பட்டுள்ளது. இது கடுமையான குற்றமாகும். கைதான சந்தேகநபர்கள் குறித்த பெண்களை தாக்கியமை மற்றும் பாலியல் வன்முறையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.”
இதேவேளை, சம்பவம் தொடர்பிலான காணொளி சிலரால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதுடன், அது குறித்த விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.