தேசிய கண் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட மயக்க மருந்து பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த மயக்க மருந்துகள் தொடர்பான உண்மைகளை விளக்கிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், குறித்த அனைத்து மயக்க மருந்துகளும் பரிசோதனைக்காக தேசிய தர ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கொஸ்கொட பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கடந்த 4ஆம் திகதி தேசிய கண் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் போது செலுத்தப்பட்ட மயக்க ஊசி காரணமாக இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
அதனுடன் தொடர்புடைய மயக்க மருந்துகளின் தரம் தொடர்பில் தீவிர கலந்துரையாடல் ஏற்படுத்தப்பட்டதுடன், இது தொடர்பான உண்மைகளை தெளிவுபடுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆகியோர் நேற்று (07) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர்.
அங்கு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன, உயிரிழந்த பெண்ணின் இதயம் 80% அடைக்கப்பட்டிருந்ததாகவும், மயக்க மருந்து வழங்கப்பட்ட பின்னர், இதயம் செயலிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, உரிய மயக்க மருந்தை செலுத்தியதாலேயே அவளது மரணம் நிகழ்ந்தது என்ற முடிவுக்கு வர முடியாது என்பது அவரது நிலைப்பாடாகும்.
எவ்வாறாயினும், மயக்க மருந்தின் நிலை குறித்து மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேசிய கண் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் பின்னர் உயிரிழந்த ஹிமாலி பிரியதர்ஷனியின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளன.