புதிய நிபந்தனைகளை அறிமுகப்படுத்தப்படும் வரை தற்போதுள்ள சிறுநீரக கொடுப்பனவு, ஊனமுற்றோர் கொடுப்பனவு மற்றும் முதியோர் உதவித்தொகைகளை தொடர்ந்தும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மாற்றுத்திறனாளிகள், நலிவடைந்தவர்கள், வறியவர்கள் மற்றும் மிகவும் வறியவர்கள் ஆகிய 04 பிரிவுகளின் கீழ் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் வழங்குவதில் எந்த வித மாற்றமும் இல்லை என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அஸ்வெசும திட்டம் தொடர்பில் இதுவரை சுமார் 760,000 மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 10,000 ஆட்சேபனைகளும் கிடைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறுகிறார்.
அஸ்வெசும திட்டத்தில் பதிவு செய்ய முடியாதவர்களுக்கும், புதிதாக இணைந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் வருடாந்த வாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதற்கமைவாக ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் முயற்சிகள், மிகவும் தேவையுடைய மக்களை இலக்காகக் கொண்டு வளங்களை சமமாக விநியோகித்தல் மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.