பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கையின் நிதிச்சுமையை குறைக்க உதவும் வகையில், கடனை மீளச்செலுத்த, இலங்கைக்கு 12 ஆண்டுகள் அவகாசம் வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.செந்தில்நாதன் இதனைத் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கை, அதன் இருதரப்பு கடன் வழங்குநர்களுக்கு, 7.1 பில்லியன் டொலர்களை கடனாக செலுத்த வேண்டியுள்ளது.
இதன்படி, 3 பில்லியன் டொலர்களை சீனாவிற்கும், 2.4 பில்லியன் டொலர்களை பரிஸ் கிளப்பிற்கும், 1.6 பில்லியன் டாலர்களை இந்தியாவுக்கும் செலுத்தவேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையின் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
அந்த மறுசீரமைப்பு நிதிவசதி கிடைக்கப்பெற்ற பின்னர், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பாக 3 முதல் 4 ஆண்டுகளில், இலங்கையிடம் இருந்து பெறவேண்டிய கடனை, 10 முதல் 12 ஆண்டுகளுக்கு நீடிக்க முடியும் என்று இந்தியாவின் ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்தின் தலைவர் செந்தில்நாதன் கூறியுள்ளார்.