முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு விரைவில் முஸ்லிம் தரப்புடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் தமிழ் சமூகத்தின் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுத்ததன் பின்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம் தரப்புடன் பேசவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்று (06) மாலை முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் ஜனாதிபதி மாளிகையில் சந்தித்த ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கினார்.
முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் தலைமையில் ஜனாதிபதியைச் சந்தித்து முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சமகால பிரச்சினைகளை முன்வைத்து அவற்றுக்குத் தீர்வு பெற்றுத்தருமாறு வேண்டிக் கொண்டனர்.
ஜனாதிபதி முஸ்லிம் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகையில் தான் இந்தியாவுக்கு விஜயமொன்றினை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் தமிழ் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியாவுடனும் கலந்துரையாடி தீர்வுத்திட்டமொன்றினை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாகவே முதற்கட்டமாக தமிழ் சமூக பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறினார்.
இந்திய விஜயத்தின் பின்பு முஸ்லிம்களுடனும், மலையக மக்களுடனும் அவர்களது பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் கூறினார்.
முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள் முஸ்லிம் சமூகத்தின் சமகால பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
சமூகங்களுக்கிடையில் கலவரங்களை உருவாக்கும் வகையிலான வெறுப்புப் பேச்சுக்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
முஸ்லிம்களின் பல பிரச்சினைகள் பாதுகாப்பு அமைச்சினால் கடந்த காலங்களில் தீர்த்து வைக்கப்பட்டன. என்றாலும் எதிர்பாராதவிதமாக அதிகார மாற்றத்தின் பின்பு இந்த நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் சில தடை செய்யப்பட்டுள்ளன. இவ்வமைப்புகள் தீவிரவாதத்தை பரப்பியதாக ஆதாரங்கள் இல்லை. இவை தடை செய்யப்பட்டுள்ளதால் அவை முன்னெடுத்த கல்வி, மற்றும் தொழில் நுட்ப பயிற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இஸ்லாமிய நூல்களின் இறக்குமதிக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவைப்படுகிறது. இஸ்லாமிய நூல்களுக்கு மாத்திரமே இந்நடைமுறையுள்ளது. ஏனைய மத நூல்களுக்கு இந்நடைமுறையில்லை. பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டியுள்ளதால் இறக்குமதி செய்து சந்தைப்படுத்துவதற்கு நீண்டகாலம் தேவைப்படுகிறது. எனவே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் சிபாரிசின் கீழ் இவற்றை விடுவிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
வெளிநாட்டு மார்க்க அறிஞர்கள் இலங்கைக்கு வருவதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல நாட்டு அறிஞர்கள் இலங்கைக்கு வரமுடியாத நிலை காணப்படுகிறது. மாணவர்களுக்கு வெளிநாட்டு மார்க்க அறிஞர்களின் போதனைகள் அவசியமாகும். எனவே இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படவேண்டும்.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மதரஸாக்கள், பள்ளிவாசல்கள் பலாத்காரமாக பொலிஸாரினால் மூடப்பட்டு சாவிகள் கையேற்கப்பட்டுள்ளன. அது விடயத்தில் அவசரமாக விசாரணைகளை மேற்கொண்டு அவை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதனால் மாணவர்கள் பயனடைவார்கள்.
சவூதி அரேபியா வழங்கிய சுனாமி வீடமைப்புத் திட்ட 500 வீடுகளும் விரைவில் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.
முஸ்லிம் காலாசார அலுவல்கள் கட்டிடத்தின் 5 மாடிகள் நல்லாட்சி அரசாங்கத்தினால் திணைக்களம், வக்பு சபை, வக்புட்ரிபியுனல் மற்றும் கொழும்பு மாவட்ட காதி நீதிமன்றங்களுக்கென்றே நிர்மாணிக்கப்பட்டது. ஆனால் முஸ்லிம் கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்கு இரண்டுமாடிகளே ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே திணைக்கள கட்டிடத்தில் வக்பு சபை, வக்புட்ரிபியுனல் கொழும்பு மாவட்ட காதி நீதிமன்றங்கள் என்பனவற்றை ஏனைய மூன்று மாடிகளில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கவும்.
பலாத்காரமாக முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டமையை நாம் கண்டிக்கின்றோம். உலக முஸ்லிம் லீக்கினால் இலங்கைக்கு 5 மில்லியன் டொலர் நன்கொடை உறுதியளிக்கப்பட்டது. என்றாலும் இலங்கை அரசாங்கம் உரிய ஆவணங்களை வழங்காமையினால் அது கிடைக்காமற்போனது. அந்தப்பணம் இன்னும் சவூதி அரேபியாவில் இருக்கிறது. இந்த நன்கொடையைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் உரிய ஆவணங்களை தயார் செய்யவேண்டும் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸினின் தலைவர் என்.எம்.அமீன், உதவித்தலைவர் ஹில்மி அஹமட், தேசிய சூறா சபை தலைவர் டி.கே.ஆசூர், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி, முன்னாள் வக்பு சபைத் தலைவர் சப்ரி ஹலீம்தீன், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், டாக்டர் சாபி சிஹாப்தீன் உட்பட சுமார் 22 பேர் கலந்து கொண்டிருந்தனர்.