கொழும்பு கண் வைத்தியசாலை மற்றும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் பின்னர் கண்பார்வை இழந்த அனைவருக்கும் நட்டஈடு வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று (02) தெரிவித்தார்.
ஒரு தொகுதி மருந்துகளில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, அதே தொகுதி திருப்பி அனுப்பப்பட்டதாகவும், இந்த சம்பவத்தின் பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனம் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருந்து கையிருப்பில் ஒரு தொகுதியில் பாக்டீரியா தொற்று காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த நஷ்டஈடு கொடுப்பனவுகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் எவரும் பொறுப்பிலிருந்து தட்டிக்கழிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
பதிவு செய்யப்படாத மருந்துகளினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து நாட்டில் உள்ள அனைவரும் பேசுவதாகவும், ஆனால் ஏழு வருடங்களாக பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனத்தின் மருந்துப் பொருட்கள் இருப்பு வைத்திருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நிறுவனமொன்றில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த மருந்து ஐம்பத்து நான்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், இதுவரை இலங்கையில் இலட்சக்கணக்கான நோயாளர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பவத்தின் பின்னர் இரண்டு நோயாளிகள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மற்ற எட்டு நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.
கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சையின் பின்னர் வழங்கப்பட்ட மருந்தில் விஷம் கலந்ததன் காரணமாக அவர்களின் பார்வை முற்றாக இழந்துள்ளதாக நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் மகேந்திர செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
மே 15 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து விரைவான அறிக்கையை வழங்குமாறு சுகாதார அமைச்சுக்கு அறிவித்திருந்தார்.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் குஜராத்தில் அமைந்துள்ள இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த ‘ப்ரெட்னிசோலோன்’ என்ற திரவ மருந்தை பயன்படுத்தியதால் இந்த ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
கண்புரை சத்திரசிகிச்சையின் பின்னர் நோயாளிகளுக்கு ஏற்பட்ட ஒவ்வாமையை கருத்தில் கொண்டு மருந்து தொடர்பில் விசாரணை நடத்த இந்திய மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு இந்திய அரசாங்கத்திடம் சுகாதார அமைச்சு கேட்டுள்ளதாகவும், குறித்த நிறுவனத்திடம் அபராதம் வசூலிக்கும் முறை குறித்தும் கேட்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இந்திய அரசாங்க மருந்து பரிசோதகர்கள் திரவ மருந்தை பரிசோதிக்கும் பணியை ஆரம்பித்துள்ளதுடன் உரிய பரிசோதனை அறிக்கைகள் கிடைத்த பின்னர் விரிவான அறிக்கை இலங்கை சுகாதார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும்.