டெங்கு ஒழிப்பிற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களின் சேவையை உடனடியாக உறுதிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்ற விவாதத்தில் இன்று (20) இணைந்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
டெங்கு மீண்டும் ஒரு தீவிர தொற்றுநோயாக மாறியுள்ளதாகவும், டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக இவர்களின் வேலைகள் நிர்ணயம் செய்யப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித்தலைவர் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பதிலளிக்கையில்;
“.. எதிர்க்கட்சித் தலைவருடன் நான் 100% உடன்படுகிறேன். இவர்கள் 2016 இல் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட குழு. இவர்களுக்கு எந்த அடிப்படைத் தகுதியும் இல்லை. ஆனால், இதுவரை எட்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
தொழிலாளர்களுக்கு வேலை வழங்கினால் அவர்களும் உறுதி செய்யப்பட வேண்டும் என மூன்று அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஒரு நாளைக்கு எழுநூறு ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். அவர்கள் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. உறுதிப்படுத்துவதற்காக மீண்டும் அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைக்கவுள்ளோம்..” எனத் தெரிவித்திருந்தார்.