அதிவேக வீதியில் இன்று(19) முதல் நடத்துனர்கள் இன்றி பஸ் போக்குவரத்து முன்னோடி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் குறிப்பிட்டார்.
புதிய செயற்றிட்டத்தின் பெறுபேறுகளுக்கு அமைய அடுத்தகட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான நஷ்டத்தில் இயங்கும் டிப்போக்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 107 டிப்போக்களில் 40 டிப்போக்கள் தற்போது தொடர்ந்து நஷ்டத்தில் உள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலான டிப்போக்கள் கிராமப்புறங்களில் இருப்பதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
நஷ்டத்தில் இயங்கும் டிப்போக்களை மூடுவதற்கு முன் நஷ்டமில்லாத சூழலை உருவாக்க இதுவரை பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரி, அந்த நடவடிக்கைகள் தோல்வியடைந்தால் மூட வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார்.