நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விவசாய சேவை நிலையங்களுக்கும் யூரியா உரம் தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை உர நிறுவனம் மற்றும் கொமர்ஷல் உர கம்பனியின் தலைவர் ஜகத் பெரேரா தெரிவித்தார்.
கடந்த வாரம் முதல் தற்போது வரை நாடளாவிய ரீதியில் உள்ள விவசாய சனசமூக நிலையங்களில் இருந்த யூரியா உரங்களுக்கு மேலதிகமாக 5100 மெற்றிக் தொன் யூரியா அனுப்பப்பட்டுள்ளது.
இன்றைய தினத்திற்குள் மேலும் 1000 மெற்றிக் தொன் யூரியாவை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 200 மெற்றிக் தொன் யூரியா உரத்தை இன்று (19) பொலன்னறுவைக்கு அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த வாரம் முதல் பொலன்னறுவைக்கு அனுப்பப்பட்ட யூரியா உரத்தின் அளவு 500 மெற்றிக் தொன்னைத் தாண்டியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
போதியளவு யூரியா உரம் இருப்பதால் யூரியா உரத்தை அனுப்ப வேண்டாம் என குறிப்பிட்ட விவசாய சேவை நிலையங்கள் உர நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளதாகவும் கலாநிதி ஜகத் பெரேரா குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, சில விவசாய அமைப்புக்கள் யூரியா உரத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை என ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. இதனை கருத்திற் கொண்டு அரசாங்கத்திற்கு சொந்தமான உர நிறுவனங்களின் இரண்டு அதிகாரிகளை நியமிக்க தலைவர் ஜகத் பெரேரா நடவடிக்கை எடுத்துள்ளார்.
எந்தவொரு விவசாய சேவை நிலையத்திலும் யூரியா உரம் இல்லை என்றால் கொழும்பு வர்த்தக உரக் கம்பனியின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் உபேந்திரா 0775510674, லங்கா உரக் கம்பனியின் விநியோக முகாமையாளர் நுவான் 0774441417 ஆகியோரிடம் விசாரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.