பிராந்தியத்தில் எந்தவொரு நாட்டிலும் செய்யப்படாத குற்றவியல் அவதூறு சட்டத்தை நீக்கியதன் மூலம் கருத்துக்களை வெளியிடும் உரிமையை தாம் ஒருபோதும் இல்லாதொழிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
உத்தேச இலத்திரனியல் ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு சட்டமானது இலத்திரனியல் ஊடகத்தினால் எந்தவொரு தரப்பினருக்கும் பாரபட்சம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் பெறுவதற்கான சந்தர்ப்பத்தை மாத்திரமே வழங்குவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
உலகின் ஒவ்வொரு நாட்டிலும் இலத்திரனியல் ஊடகங்களைக் கையாள்வதற்கு இவ்வாறான முறை பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்த திரு.ரணில் விக்கிரமசிங்க, இலங்கையிலும் இதனை நடைமுறைப்படுத்துவதில், ஐக்கிய இராச்சியத்திலும் இலத்திரனியல் ஊடகங்களுக்கும் அதே வழிகாட்டல்களை உள்ளடக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று (15) பிற்பகல் ஹோமாகம பிரதேச செயலக வளாகத்தில் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையத்தளத்தில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
வெளிநாட்டு கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள், தீவு முழுவதும் உள்ள 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய 50 பிராந்திய செயலக அலுவலகங்கள் ஊடாக தமது வெளிநாட்டு கடவுச்சீட்டிற்கு இலகுவாக இணையவழியில் விண்ணப்பிக்கும் வாய்ப்பு இப்போது வழங்கப்பட்டுள்ளது.