ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரபுக்களுக்கு சலுகைகளை வழங்கி நாட்டை வங்குரோத்து செய்ததாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவ்வாறே செய்கின்றார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டின் பொது மக்கள் மீது எந்த உணர்வும் இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதற்கு சிறந்த உதாரணம் மின்சாரக் கட்டணமே எனவும் தெரிவித்தார்.
நாட்டின் வளங்களைச் சூறையாடி நாட்டை அழிவுக்குக் கொண்டு வந்த மக்களை தற்போதைய ஜனாதிபதி பாதுகாத்து வருவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இவ்வாறான பயங்கரமான அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டுச் சேராது எனவும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியும் ஜனாதிபதியும் ஒன்றிணைவதாக அரசாங்கத்திற்கு நட்பான சில ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டு மக்களுக்கு தாம் ஒருபோதும் துரோகம் இழைக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியை முதலில் நியமித்த பொஹொட்டுவவை சேர்ந்த குழுவினரே வந்து அமைச்சர் பதவியை கேட்டதாகவும் தற்போது அது சூதாட்டமாக மாறியுள்ளதாகவும் நாடாகம் இன்னும் ஒன்றரை வருடங்களே உள்ளதாகவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மொனராகலை உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களை இன்று சந்தித்த போதே எதிர்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.