சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் தண்டனை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் சம்பவம் தொடர்பில் சபாநாயகர் விசேட அறிக்கை ஒன்றை கோரியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையை வழங்குமாறு சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அண்மையில், அலி சப்ரி ரஹீமின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குவதற்கான பிரேரணையை கொண்டு வருவது தொடர்பில் கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற விவகாரக் குழுவில் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் குறித்த உறுப்பினர் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காகவே இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கடந்த 23ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் ஏழரை கோடி பெறுமதியான தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசியுடன் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போது கைது செய்யப்பட்டார்.
பின்னர் 75 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து விடுதலை செய்யப்பட்டார்.