பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, தனது நாட்டின் மீது ஆக்கிரமிப்பு ஏதேனும் நடந்தால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம் என எச்சரித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து கூறுகையில்;
அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய ஒரு அவசியத்தை கடவுள் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். ஆனால் எங்கள் நாட்டின் மீது ஆக்கிரமிப்பு நடந்தால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயங்க மாட்டோம்.
ரஷிய ஜனாதிபதி புதினை தனது பெலாரஸ் நாட்டில், தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்துமாறு தாம்தான் கேட்டுக் கொண்டதாகவும், தனது நாட்டின் மீது தாக்குதலோ, ஆக்கிரமிப்போ நடக்க மிகவும் அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதால் இதை செய்ததாகவும், இத்தகைய ஆயுதங்களைக் கொண்ட ஒரு நாட்டை எதிர்த்துப் போராட எந்த நாடும் முன்வராது என்றும், இவை தாக்குதலை தடுக்கும் ஆயுதங்கள் எனக் கூறினார்.
உக்ரைன் பதிலடி கொடுத்து வரும் நிலையிலும், விரைவில் நேட்டோ மாநாடு நடைபெற இருக்கும் நிலையிலும் அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் கருத்துக்கள் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக, புதின் குறுகிய தூர அணு ஆயுதங்களை அதன் நட்பு நாடான பெலாரஸில் வைப்பதற்கு ஏற்பாடு செய்து வருவதாகவும், அடுத்த மாதம் 7ம் திகதியில் இருந்து இந்த பணி தொடங்கும் எனவும், அவற்றை இயக்கும் கட்டுப்பாடுகள் தன்வசம் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரஷியாவின் இந்த நடவடிக்கை ரஷிய- உக்ரைன் போரில் ரஷியாவிற்கு எதிராகவும் உக்ரைனுக்கு ஆதரவாகவும் அமெரிக்க தலைமையிலான மேற்கத்திய நாடுகள் எடுத்திருக்கும் நிலைக்கும் இது பதில் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
ஒரு போர் பின்னணியில், இந்த தந்திரோபாய அணு ஆயுதங்களின் செயல்பாடுகள் எதிரிப்படைகள் மற்றும் ஆயுதங்களை அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் காணப்படும் அணு ஆயுதங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆயுதங்களின் தாக்குதல் வரம்பு குறைவாகவே உள்ளது.
அதேபோல் ஒட்டுமொத்த நகரங்களையும் அழிக்கும் திறனிலும் இவற்றின் அழிவு சக்தி கணிசமான அளவில் குறைவாகவே உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சோவியத்-கால அணு ஆயுதங்களில் உக்ரைன் மற்றும் கஜகஸ்தானுடன் இணைந்து பெலாரஸ் நாடும் கணிசமான பங்கை வைத்திருந்தது.
1991-ல் சோவியத் யூனியன் சிதறுண்டதால், அமெரிக்கா முன்னிட்டு ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் வாயிலாக அந்த அணு ஆயுதங்கள் ரஷ்யாவிடம் திரும்ப அளிக்கப்பட்டன.