உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் விரைவில் உண்மையை தாங்களாகவே வெளிப்படுத்துவார்கள் என்றும், இந்த பாவச் செயலில் ஈடுபட்டவர்கள் மறைக்க முடியாது என்றும் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் உலகிற்கு வெளிப்படும் நாளுக்காக அனைவரும் காத்திருப்பதாகவும், “அன்றைய தினம் இந்த தேவாலயங்களில் நன்றி தெரிவிக்கும் பெருவிழா நடைபெறும்” என்றும் அவர் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கத்தோலிக்க திருச்சபையை சிலர் ஏமாற்ற முயல்கிறார்கள், ஆனால் ஏமாற்ற வேண்டியது கத்தோலிக்க திருச்சபையை அல்ல என்றும், தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் கொலைகளை ஊக்குவித்தவர்கள் இன்றைய சமூகத்தில் பெரிய இடங்களில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
கொழும்பு புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற புனித அந்தோனியாரின் 189 ஆவது வருடாந்த பெருவிழாவை முன்னிட்டு இடம்பெற்ற விசேட மாலை ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நீதி, சட்டம் என்று பெரிதாகப் பேசும் அமைச்சர்கள் சட்டங்களைக் கொண்டுவந்து பல்வேறு சட்டங்களை இயற்றி மக்களின் வாயை அடைத்து சிறையில் அடைக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “சிலர் காலை நேரத்தில் சட்டத்தை மாற்றி, அனைத்து தவறுகளையும் அடக்கி நன்றாக செயல்படுவதாக நினைக்கிறார்கள், ஆனால் உண்மை விரைவில் உலகுக்கு அம்பலமாகும்” எனத் தெரிவித்திருந்தார்.