வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு மகா கதிர்காம விகாரையில் வருடாந்த எசல பெரஹெர விழாவை முன்னிட்டு கதிர்காமத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இம்மாதம் 19ஆம் திகதி முதல் மூடப்படும் என தனமல்வில பிராந்திய கல்விப் பணிப்பாளர் புத்திக கருணாதாச தெரிவித்தார்.
இவ்வருடம் எசல பெரஹரா உற்சவம் இம்மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகி, ஜுலை 3ஆம் திகதி மஹா பெரஹரா இடம்பெற்று, மறுநாள் மாணிக்க கங்கை நீர் வெட்டப்பட்ட பின்னர் நிறைவடையும்.
இந்த பெரஹரா திருவிழாவை முன்னிட்டு விசேட கடமைக்கு வரவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குமாறு மூன்று பாடசாலைகளின் கட்டிடங்களை பொலிஸ் திணைக்களம் கோரியுள்ளது.
இதன்படி, கதிர்காமம் தேசிய பாடசாலை, செல்ல கதிர்காமம் உயர் பாடசாலை, தெட்டகமுவ உயர்தர பாடசாலை ஆகியன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
விடுமுறை அளிக்கப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 05 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக வலயக் கல்விப் பணிப்பாளர் புத்திக கருணாதாச தெரிவித்தார்.