இலங்கை மக்களின் அதிக தேவையுடைய இறக்குமதி செய்யப்பட்ட மெண்டரின் ஆரஞ்சு இனத்தை (Mandarin orange) பயிரிட மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி வெற்றியளித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் தாழ்வான பகுதிகள்மெண்டரின் ஆரஞ்சு பயிர்ச்செய்கைக்கு உகந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை புதிய பயிர்ச்செய்கை திட்டங்களின் விஸ்தரிப்புக்கு பயன்படுத்துவது தொடர்பாக விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இது தெரியவந்துள்ளது.
அங்கு கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களை அண்மித்த பகுதிகளில் செவ்வாழை பயிர்ச்செய்கை வலயத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.