போட்டித்தன்மையுள்ள பொருளாதாரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக காணிச் சட்டங்கள், தொழிலாளர் சட்டங்கள், முதலீட்டுச் சட்டங்கள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான சட்டங்கள் தொடர்பில் விரிவான மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என கலாநிதி ஆர். எச். எஸ் சமரதுங்க வலியுறுத்தினார்.
அதற்கான சட்ட வரைபு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நுவரெலியாவில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான தேசிய சட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்வழங்குநரும் பெறுநரும் முன்வைத்த விடயங்களைக் கருத்திற் கொண்டு தற்போதைய வேலைவாய்ப்புப் போக்குகளுக்கு இணங்கக்கூடிய புதிய ஒருங்கிணைந்த சட்டத்தை தொழிலாளர் அமைச்சு தயாரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
08 மணி நேர பணிநேரம் என்ற சம்பிரதாயமான கருத்திற்குப் பதிலாக தற்போதைய தொழில் சந்தைக்கு இணக்கமான நெகிழ்வான ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார்.
உத்தேச சட்டம் உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றப்படும் என்றும் கலாநிதி சமரதுங்க நம்பிக்கை தெரிவித்தார்.
பொருளாதார அபிவிருத்தியில் பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தை விளக்கிய அவர் தொழில் சந்தையின் பெண்களின் அதிக பங்களிப்பை அதிகரிப்பது தொடர்பில் புதிய சட்டங்களின் அவசியத்தையும் வலியுறுத்தினார்
பொருளாதாரத்தை வலுப்படுத்த டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையை விரைவுபடுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் கூறினார். டிஜிட்டல் மயமாக்கலின் நன்மைகளை உணர்ந்து, ஒவ்வொரு துறையிலும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும், அதை சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஒருங்கிணைக்கவும் அரசாங்கம் விரைவான மற்றும் பயனுள்ள திட்டத்தை செயல்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
காணி, தொழில், மூலதனம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான உத்தேச சட்ட திருத்தங்களின் ஊடாக மாறிவரும் பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுத்து போட்டியை எதிர்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் நாட்டின் எதிர்கால பயணத்தில் அனைவருக்கும் அபிவிருத்தியை அடையயக் கூடிய பொருளாதாரம் உருவாக்கப்படும் என்றும் சமரதுங்க மேலும் குறிப்பிட்டார்.
2023 தேசிய சட்டத்தரணிகள் மாநாட்டின் வரலாற்றில் முதன்முறையாக இலங்கையின் அடிப்படைத் தேவைகள் மற்றும் அது தொடர்பில் சட்டத்தரணிகள் சமூகத்தின் பங்கு குறித்து கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதுடன் இதன் மூலம் சட்ட வல்லுநர்கள் மற்றும் வர்த்தக சமூகம் ஒன்றிணைந்து செயல்படுவதன் ஊடாக நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
தேசிய நலன்களாக சுதந்திரமான நீதித்துறையின் முக்கியத்துவத்தை மையமாக வைத்து, கருத்தொற்றுமையை கட்டியெழுப்புவது, கூட்டுச் செயற்பாடுகளை கட்டியெழுப்புவது மற்றும் இலங்கையின் எதிர்காலத்திற்கு சாதகமான மாற்றத்தை உருவாக்குவது மாநாட்டின் நோக்கமாகும்.
2023/24 தேசிய சட்ட மாநாடு 2023 ஜூன் 02 முதல் 04 வரை நுவரெலியா கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. மாநாட்டின் இரண்டாவது அமர்வில், பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பான துறைசார் கருத்துக்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக சமூகத்திடம் இருந்து பெறப்பட்டது.
இவ்வாறான ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தமைக்காக சட்டத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் வர்த்தக சமூகத்தினரால் பாராட்டப்பட்டதுடன், நெருக்கடியிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கத்தின் நேர்மையான முயற்சிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பணியில் கூடுதலான பங்களிப்பையும் ஆதரவையும் வழங்குவதாக வர்த்தக சமூகம் உறுதியளித்தது